Thu07242014

Last update02:38:10 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் வாக்காளர்களா, பிச்சைக்காரர்களா?

வாக்காளர்களா, பிச்சைக்காரர்களா?

  • PDF

“கலர் டிவி, கிலோ 2 ரூபாய்க்கு அரிசி, 2 ஏக்கர் நிலம்” என்று வாக்குறுதி தருகிறார் கருணாநிதி. “இலவச சைக்கிள் கொடுத்தேன், பாடநூல் கொடுத்தேன், வெள்ள நிவாரணம் கொடுத்தேன், கோயிலில் அன்னதானம் போட்டேன், இலவசத் திருமணம் நடத்திவைத்தேன்” என்று சாதனைப் பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா. “மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகத் தருகிறேன், அதையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறேன், கல்யாணம் பண்ணி வைத்து பிள்ளை பெத்தால் அதற்கும் பணம் கொடுக்கிறேன்” என்கிறார் நடிகர் விஜயகாந்த்.


இந்த வாக்குறுதிகளைப் படிப்பவர்கள், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பிச்சைக்காரர்கள் என்ற முடிவுக்குத்தான் வர முடியும்.இப்படி எல்லாவற்றையும் இலவசமாக அள்ளி அள்ளிக் கொடுத்தால் அரசாங்க கஜானாவே காலியாகி விடுமென்று ஆத்திரம் பொங்க பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள் திமிர் பிடித்த மேட்டுக்குடி அறிவாளிகள்.


யாருடைய பணத்திலிருந்து நமக்கு இந்த ‘இலவசங்களை’ வழங்குகிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்? அரசாங்க கஜானாவில் சேரும் வரிப்பணத்தில் ஆகப்பெரும்பகுதி ஏழை- நடுத்தர மக்கள் கொடுக்கும் மறைமுக, நேர்முக வரிப்பணம்தான். ஏழை களின் வரிப்பணத்திலிருந்து ஏழைகளுக்குச் செலவிடுவதை ‘இலவசம்’ என்று எப்படி அழைக்க முடியும்?


இலவச சைக்கிளுக்கு 83 கோடி, பாடநூலுக்கு 113 கோடி, சத்துணவுக்கு 850 கோடி, உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்கு 300 கோடி - என்று பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா.


·போர்டு, ஹ¥ண்டாய், கோகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலமும், தண்ணீரும், மின்சாரமும், சாலை வசதிகளும் செய்து கொடுத்து அவர்களுக்கு வரிச் சலுகை களையும் வாரி வழங்கியிருக்கிறது ஜெ அரசு. மக்களுடைய வரிப்பணத்திலிருந்து பன்னாட்டு முதலாளிகள் ஒவ்வொரு வருக்கும் எத்தனை ஆயிரம் கோடி சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற இரகசியத்தை ஜெயலலிதா வெளியிடுவாரா? ‘முதலாளிகளுக்கான இலவசத் திட்டங்கள்’ என்று இவை அழைக்கப் படுவதில்லையே, ஏன்?


2004-05 ஆம் ஆண்டில் மட்டும் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு ப.சிதம்பரம் வழங்கி யுள்ள வரித்தள்ளுபடி 1,58,661 கோடி ரூபாய் என்கிறது முதலாளி வர்க்கத்தின் பத்திரிகையான பிசினஸ் ஸ்டாண்டர்ட். ஆனால் இதே ஆண்டில் நாடு முழுவதும் உள்ள மக்களின் ரேசன் அரிசிக்காக சிதம்பரம் வழங்கிய மானியம் ரூ.25,000 கோடி மட்டும்தான். யார் வழங்கும் மானியத்தில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறதா?


ஆண்டொன்றுக்கு டாஸ்மாக்கின் மொத்த விற்பனை 24,000 கோடி என்கிறார் ஜெயலலிதா. இதில் அரசுக்குக் கிடைக்கும் ஆண்டு வருவாய் சுமார் 5000 கோடியாம். என்றால், சசிகலாவின் சாராயக் கம்பெனி அடித்த லாபம் எத்தனை ஆயிரம் கோடி? சாராயத்தில் வரவு 5000 கோடி, சத்துணவுக்குச் செலவு 850 கோடி. இந்த அயோக்கியத் தனத்துக்குப் பெயர் இலவசத் திட்டமாம்!


தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகிக் கொண்டிருக்கிறது என்றும் இதைச் சாதித்தது நான்தான் என்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இந்தப் பெருமைக்குப் போட்டி போடுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்கும் இத்தகைய ‘இலவச’த் திட்டங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதுதான் தமிழகத்தின் முன்னேற்றமா?


கிலோ 2 ரூபாய்க்குக் கிடைக்கும் புழுத்த அரிசியில்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற அளவிற்கு மோசமான வறுமை நிலையில் தமிழ்நாட்டின் பல கோடி மக்கள் வைக்கப்பட்டிருப் பது ஏன்? நிலமில்லாத கூலி விவசாயி மட்டுமல்ல, தன்னுடைய நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயி கூட சொந்த நிலத்தில் விளைந்ததை வந்த விலைக்கு விற்று விட்டு, இந்த 2 ரூபாய் புழுத்த அரிசியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? எதை நட்டாலும் விவசாயம் விளங்காத போது கருணாநிதி கொடுக்கவிருக்கும் புறம்போக்கு நிலத்தில் யாரை நடுவது?


பெற்ற பிள்ளைக்குத் திருமணம் செய்யவும், கட்டிய மனைவிக்கு சேலை எடுத்துக் கொடுக்கவும், அவளுக்குப் பிரசவம் பார்க்கவும் விஜயகாந்த் பணம் கொடுக்க வேண்டிய நிலைமைதான் 12 தேர்தல்களில் நாம் கண்ட முன்னேற்றமா?


2000 ரூபாய் காசுக்காக சென்னை நகரில் 50 பேர் மிதிபட்டுச் செத்திருக்கிறார்களே, மக்களை இந்த அவலமான வாழ்க்கை நிலைக்கு விரட்டியது யார்?


ஜெயலலிதா கூட்டத்துக்குப் போனால் சோறு போட்டு 100 ரூபாய், ஸ்டாலின் கூட்டத்துக்குப் போனால் சேலை, இன்னொரு மந்திரி கூட்டத்துக்குப் போனால் 2 கிலோ அரிசி, புரட்சித் தலைவி பிறந்த நாளுக்கு அன்னதானம்... என்று எட்டுத்திக்கும் பிச்சை யெடுத்துத் திரிய வேண்டிய மானங்கெட்ட நிலைமை மக்களுக்கு ஏன் ஏற்பட்டது?


இப்படிப்பட்ட கேள்விகளை ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் எழுப்புவதில்லை. இலவச டிவி கொடுக்க முடியுமா முடியாதா, 2 ரூபாய் அரிசி போட முடியுமா முடியாதா என்று அனல் பறக்கும் விவாதம் நடத்துகிறார்கள். பண்ணையார்களிடம் பொங்கல் இனாம் வாங்கப்போன பண்ணையாட்களைப் போல மக்களைத் தங்கள் முன்னால் கையேந்தி நிற்க வைக்கிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள்.


தாம் சொந்தமாகச் சம்பாதித்த காசிலிருந்து பழனி படிக்கட்டில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்கிறார்கள் பக்தர்கள். ஆனால் ஓட்டுப்பொறுக்கிகளோ, நம்மைக் கொள்ளையடித்த பணத்திற்குச் சில்லறை மாற்றி 50, 100, 500 என்று நமக்கே விட்டெறிகிறார்கள். இவர்களுக்கு எப்படி வந்தது இந்தப் பணம்?


அரசாங்க காண்டிராக்டில் அடித்த கொள்ளை, காடுகளையும் மலைகளையும் வெட்டி விற்ற காசு, புறம்போக்குகளை விற்று ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றிக் குவித்த பணம், ரேசன் அரிசி,வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம்,வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் சுருட்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்க அதிகாரிகள் வாங்கும் லஞ்சப்பணத்தில் வசூலிக்கும் கப்பம், சட்டவிரோத சமூக விரோதத் தொழில்கள், போலீசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் கட்டைப் பஞ்சாயத்து கலெக்சன், இவையனைத்துக்கும் மேலாக பன்னாட்டு முதலாளிகளிடம் நாட்டைக் கூட்டிக் கொடுத்து வாங்கிய கமிசன்........ என்று இவர்கள் சூறையாடிய பொதுச் சொத்துதான் தொகுதிக்கு 4 கோடி 5 கோடி என ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது.


முன்னர் முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கித் தின்று கொண்டிருந்த ஓட்டுப்பொறுக்கிகள், தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பின்னர் தாங்களே முதலாளிகளாக மாறத் தொடங்கிவிட்டார்கள். கந்து வட்டிக் காரர்கள், காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், சினிமா தயாரிப்பாளர்கள், தண்ணீர் வியாபாரிகள், கிரானைட் அதிபர்கள், பஸ் கம்பெனி அதிபர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் ஏஜெண்டுகள் .. என இந்த ஓட்டுப் பொறுக்கித் தொழிலதிபர் களின் கொள்ளை லாபம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.


இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத் தன்னுடைய சாராயக் கம்பெனி லாபத்திலிருந்து, ஜெயா-சசி கும்பல் ஓட்டுக்கு 1000 ரூபாய் கூடக் கொடுக்கும்; ஒரே ஆண்டில் போட்ட காசையும் எடுக்கும். தன்னால் போண்டியாக்கப்பட்ட ஏழை மக்களையே தனக்கு விசுவாசமான ஓட்டு வங்கியாக உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, அவர்களைத் தன்னுடைய கையேந்திகளாகத் திட்ட மிட்டே மாற்றி வருகிறது ஜெயா - சசி கும்பல். கருணாநிதியோ ஏழைகளை அரசாங்கக் கையேந்திகளாக ஆக்கும் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவிக்கிறார்.


தள்ளாத வயதிலும் கடுமையாக உழைத்துக் கஞ்சி குடிக்கும் மானமுள்ள உழைக்கும் மக்கள் பிச்சைக்காரர்களாக நடத்தப் படுகிறார்கள். சூடு, சொரணை, மான ரோசமில்லாமல் பதவிக்காக எவன் காலையும் பிடிக்கத் தயங்காத இழிபிறவிகளும், அடுத்தவனை ஏமாற்றியே உடம்பை வளர்த்த சோம்பேறிகளும், பொதுச் சொத்தை வளைக்கவும் சொந்த மனைவியை விலை பேசவும் தயங்காத கயவர்களும் "எம்.எல்.ஏ காட்டன், மினிஸ்டர் காட்டன்' சட்டைகளுக்குள் புகுந்துகொண்டு மினுக்கித் திரிகிறார்கள்.


கேவலம் ஒரு டீயைக் கூட அடுத்தவன் காசில் மட்டுமே குடித்துப் பழகிய இந்த அயோக்கியர்கள் மக்களுக்கு இலவசத் திட்டம் அறிவிக்கிறார்கள்; ஓட்டுக்கு 200, 300 பணமும் கொடுக்கிறார்கள். இவர்களிடம் கையேந்தி நிற்பதும், இப்படிப்பட்ட தேர்தலில் வாக்களிப்பதும் நம்மை நாமே பிச்சைக்காரர்கள் என்று ஒப்புக்கொள்வதற்குச் சமமல்லவா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.

Add comment


Security code
Refresh